மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். - (மத்தேயு 12:36).
வயதான தாத்தா ஒருவர் தனது பேரனுடன் ஞாயிற்று கிழமை ஆலய ஆராதனைக்கு சென்றார். எப்பொழுதம் யாரையாவது குறை பேசியே பழகி போன தாத்தாவின் கண்கள் சுற்றும் முற்றும் பார்த்தன. பார்வை உட்கார்ந்திருந்த பெஞ்சின் மீது பட்டது. 'சே, சே உதவாத பெஞ்ச் அங்குமிங்கும் அசைந்து கொண்டே இருக்கிறது. யாராவது இதை சரி செய்கிறார்களோ, கமிட்டி என்னதான் செய்கிறதோ' என்று சலித்து கொண்டார். இந்நிலையில் பாடல் ஆரம்பமானது. தாத்தா பாடற்குழுவினரையும் இசைக்கருவி வாசிப்போரையும் மாறிமாறி பார்த்து கொண்டு, பாடல் ஒரு ராகம், இசை இன்னொரு ராகம் என்று கொஞ்சம் சத்தமாகவே புலம்பி கொண்டார். அருகிலிருந்தோர் இவரை பார்த்தாலும் தாத்தா கண்டு கொள்ளவில்லை. அப்போது திடீரென்று கரண்ட போய் விட்டது. ஆலயத்தில் ஜெனரேட்டர் இல்லை. 'என்ன சபை இது! ஒரு ஜெனரேட்டர் வாங்க முடியவில்லையே' என்று கூறி கொண்டிருக்கும்போதே கரண்ட் வந்து விட்டது.
என்ன பரிதாபம்! தாத்தாவின் தலைக்கு மேலிருந்த ஃபேன் மட்டும் சுற்றவில்லை. சொல்லவா வேண்டும்? ஆராதனையில் தாத்தா இருந்த இரண்டு மணி நேரத்தில் அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. இறுதியில் போதகரின் பிரசங்கத்தையும் குறைகூறி கொண்டு வெளியே வந்த தாத்தா தனது பேரனிடம் 'என்ன சபை இது? ஒழுங்கான பெஞ்ச இல்லை, ஃபேன் ஓடவில்லை, ஒற்றடை அடிக்கவில்லை, அவசரத்திற்கு ஜெனரேட்டர் இல்லை' என்று மூச்சு விடாமல் பேசிய தாத்தாவை பார்த்த பேரன், 'நீங்கள் போட்ட ஒரு ரூபாய் காணிக்கைக்கு ஒரு இலட்ச ரூபாய்க்குரிய குறையை சொல்லாதீர்கள்' என்று அமைதியாக பேசிய பேரனை தாத்தா ஆச்சரியத்துடன பார்த்தார்.
மேலே கூறப்பட்ட சம்பவம் வேடிக்கையாக தோன்றினாலும், நம்முடைய சுபாவமும் சில நேரங்களில் இவ்வாறே காணப்படுகிறது. தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து, தம்முடைய கிருபையினால் தமது இரத்தத்தை கிரயமாக கொடுத்து, நம்மை இரட்சித்திருக்கிறார். அப்படியிருக்கும்போது, நாம் மற்றவர்களுடைய சிறு சிறு குறைவுகளை மன்னித்து, அவர்களை ஆசீர்வதிக்கவே அழைக்கப் பட்டிருக்கிறோம். மற்றவர்களை அற்பமாய் எண்ணுதல் தேவனுடைய பிள்ளையின் குணமல்ல, மற்றவாகளின் குறைகளை குறை சொலல்லி திரிகிறவர்களையல்ல, பிறரை தங்களைவிட மேன்மையாக எண்ணி உண்மையாக நேசிப்பவர்கள்களையே தேவன் விரும்புகிறார். உண்மையில் மற்றவர்களுடைய குறைவுகள் நமக்கு தெரியுமானால் சகோதர அன்போடு, தகப்பனுடைய சிந்தையோடு அவர்களுக்காக ஜெபித்து குறைவுகளை சரிசெய்ய உதவ வேண்டும். மற்றவர்களிடம் அவர்களை குறித்து ஏளனமாக பேசி காரியங்களை வெளிப்படுத்த கூடாது.
தேவன் பேசும் வாய்ப்பை நமக்கு மாத்திரமே கொடுத்திருக்கிறார். அதை நல்ல முறையில் பயன்படுத்தி சோர்ந்து போய் இருக்கிறவர்களை நம்முடைய உற்சாகப்படுத்தும் வார்த்தைகளால் உற்சாகப்படுத்தலாமே! செய்யகூடிய காரியங்களை செய்ய முடியாதவர்களுக்கு ஆலோசனைகளினால் உதவலாமே, இப்படியாக அநேக காரியங்கள் செய்ய வேண்டியதிருக்க இப்படி குறை சொல்லி, வார்த்தைகளை வீணாக்க வேண்டாம்.
சிலருக்கு ஏதாவது ஒரு இரகசியம் மற்றவர்களை குறித்து தெரிந்து விட்டால் போதும், உடனே மற்றவர்களுக்கு அதை வெளிப்படுத்தி, அவர்களை குறித்து நார் நாராக பேசி கிழிக்காவிட்டால் தூக்கமே வராது!
மற்றவர்களை குறித்த அநேக காரியங்களை தேவன் நமது செவிகள்பட அனுமதிப்பது அவர்களுக்காக ஜெபிக்கவே. நாம் செய்ய வே;ணடிய காரியங்களை செய்யாவிட்டால் செய்ய கூடாத காரியங்களையே செய்வோம். பேச வேண்டிவைகளை பேசாவிட்டால், பேச கூடாதவைகளையே பேசுவோம். அந்தரங்கத்தில் தேவனிடத்தில் நாம் கூறுகிற நம் பாவக்காரியங்களை தேவன் வெளிப்படையாக அறிவித்தால் நம் நிலைமை என்னவாகும்? தேவன் நம்மேல் அன்புள்ளவராயிருக்கிறார். ஆகவே அதைபோல அவருடைய பிள்ளைகளாகிய நாமும் பிறரது தவறுகளை, குறைகளை வெளிப்படுத்தி, அவர்களை அவமானப்படுத்தாமல் அன்பான வார்த்தைகளால் மற்றவர்களை ஆதாயம் செய்வோம். ஆமென் அல்லேலூயா!
வீணான வார்த்தைகளை பேசக்கூடாது என்றுதானே வேதம் சொல்கிறது எழுதகூடாது என்று சொல்லவில்லையே என்று எண்ணிக்கொண்டு தரம்கெட்ட வார்த்தைகளை எழுத துணிய வேண்டாம். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும் என்றும் வசனம் சொல்வதால் உள்ளத்தின் நிறைவால் நீங்கள் எழுதும் வார்த்தைகளை எங்காவது ஓரிடத்தில் வாய் பேசியே தீரும் என்றே நான் கருதுகிறேன்.