பிணத்தால் தீட்டுபட்டவர்களை குறித்து பழய ஏற்பபட்டில் பலவிதமான பிரமாணங்கள் உண்டு அவைகளில் முக்கியமானது ஆகாய் தீர்க்கதரிசி சொல்லியிருக்கும் கீழ்கண்ட வசனம் ஆகும்
ஆகாய் 2:13. பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் பின்னும் கேட்டான்; அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக: தீட்டுப்படும் என்றார்கள். 14. அப்பொழுது ஆகாய் அப்படியே இந்த ஜனங்களும் இந்த ஜாதியாரும் என் சமுகத்தில் இருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களுடைய கைகளின் எல்லாக் கிரியைகளும் அப்படியே இருக்கிறது; அவர்கள் அங்கே கொண்டுவந்து படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது.
அதாவது பிணத்தை தொட்டு தீட்டு பட்டவன் ஒருவன் வேறு எந்த பொருளை தொட்டாலும் அந்த பொருளும் தீட்டுபட்டு போகும், பின்னர் அந்த பொருளை தேவனுக்கு காணிக்கையாக படைப்பது முடியாத காரியம். எனவே நாம் தேவனுக்கு படைக்கும் காணிக்கை பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்றால் நாம் தீட்டில்லாதவர்களாக பரிசுத்தமாக இருக்கவேண்டும்.
அன்று பிணத்தை தொட்டு தீட்டு பட்டவர்கள்போல அநேகர் இன்று பணத்தின்மேல் மோகம் வைத்து அல்லது பண ஆசையால் நிறைந்து தீட்டுபட்டு போயிருக்கிறார்கள்
பிணத்தினால் தீட்டுபடுவதும் பணத்தினால் தீட்டு படுவதும் ஏறக்குறைய ஒன்றுதான்!
அநியாயமாகவும் அடுத்தவரை ஏமாற்றும் சம்பாதிக்கும் பணம் நம்மிடம் இருக்கும்வரை அது நம்மை தீட்டுபடுத்துவதொடு நமக்கு சாபமாகவும் அமையும்.
மேலும் அநேகர் பணத்துக்காகவும் வசதியான வாழ்க்கையையும் நாடும் இவர்கள் அதற்காகவே தேவனை தேடும் நிலையில் இருக்கிறார்கள். பணத்தை நம்பும் அளவுக்கு தேவனை இவர்கள் நம்புவது இல்லை பண ஆசையே எல்லா தீமைக்கும் வேறாக இருந்து மனுஷனின் இருதய நிலையை தீட்டுபடுத்துவதால் அவர்கள் படைக்கும் காணிக்கைகள் எல்லாமே தீட்டுபட்டு போனதாகவும் தேவனுக்கு அருவருப்பானதாகவும் இருக்கிறது.
I கொரிந்தியர் 15:19இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களா யிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்
இரண்டு எஜமான்களுக்கு ஒருவன் ஊழியம் செய்துவிட முடியாது என்று ஆண்டவராகிய இயேசு சொன்ன வார்த்தையை இங்கு நினைப்பூட்டுகிறேன்.
எனவே உங்கள் காணிக்கைகள் அங்கீகரிக்கப் படவும் ஜெபங்கள் கேட்கப்படவும் முதலில் உங்களை தீட்டுபடுத்தும் பணத்தின் மேலிருக்கும் பற்றை சுத்திகரித்துவிட்டு பின்னர் தேவனை தேடுங்கள் அப்பொழுது உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களுக்கு தேவன் நிச்சயம் செவிகொடுப்பார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பணம் தவறல்ல, பண ஆசைதான் பாவமென்று வேதம் கூறுகிறது எனவே அம்மட்டில் நிறுத்திக்கொள்ளலாம் என்று தயவுசெய்து மகா முக்கியமான சத்தியத்துக்கு செவியை விலக்கிவிடாதீர்கள்! பணம் பாவமில்லையென்றால்“அநீதியான உலகப்பொருள்(லூக் 16:9,11)” என்று ஆண்டவர் சொல்வாரோ! பணம் நல்லது என்றால் அதன்மீது வைக்கும் ஆசை எப்படி தீமையாக முடியும்?
அப்படியானால் பணத்தை அநீதியென்று சொல்லும் உங்கள் பாக்கெட்டில் பணமில்லையா? நீங்கள் சம்பாதிக்கவில்லையா? பணத்தைப் பயன்படுத்தவில்லையா?… உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் இத்தொடரில் பதில் இருக்கிறது.
சர்வவல்லவருக்கு ஒரு எதிரி இருக்க முடியுமோ?
நம் தேவன் தன்னிகரற்றவர். யாருடனும் ஒப்பிடமுடியாத ராஜாதிராஜா! ஆயிரங்கோடி லூசிபர்கள் ஒருங்கே வந்தாலும் அவர் பாதத்தில் சுண்டுவிரலைக்கூட அசைக்க முடியாது. அப்படிப்பட்ட ஒப்புயர்வற்ற தேவனுக்கு யாரேனும் எதிரியாக இயலுமா? அவரை எதிரியென்று நினைத்துப் பார்க்கும் தகுதியாவது தரணியில் யாருக்கேனும் உண்டா? இல்லை இல்லவேயில்லை.
தகுதியிலேயோ, வல்லமையிலேயோ, மகத்துவத்திலேயோ யாரும் அவருக்கு இணைவைக்க முடியாது. அவர் சிருஷ்டிக்கர்த்தர், சருவலோக அதிபதி, துதிக்கும் தொழுகைக்கும் அவர் மட்டுமே பாத்திரர். ஆனால் அற்பத்திலும் அற்பமான நம்மை என்று அவர் தனக்குப் பொக்கிஷமாகக் கொண்டாரோ, என்று தகுதியற்ற நமக்காக தம்மைத் தரைமட்டும் தாழ்த்தினாரோ அன்று நாமே சிலவற்றை அவர் அளவுக்கு நம்வாழ்வில் உயர்த்திவைத்து அவற்றை அவருக்கு எதிரியாக்கிவிட்டோம்.
இன்னும் புரியும்படி சொல்லுகிறேன். பல தேசங்களைக் கட்டி ஆளும் ஒரு சக்கரவர்த்தி இருந்தார், அவருக்கு பூமியின் அரசர் எல்லோரும் கப்பம் கட்டினார்கள். அவரை எதிர்த்துப் பேசக்கூட துணிவு ஒருவனுக்கும் இல்லை. அப்படிப்பட்ட சக்கரவர்த்திக்கு ஐந்து வயதில் ஒரு சின்ன மகள் இருந்தாள். அவள் மீது அவர் தன் உயிரையே வைத்திருந்தார். அந்த சின்ன மகளுக்கு நியமிக்கபட்ட ஒரு வேலைக்காரி தந்திரமாக குழந்தையை வசப்படுத்தி அவள் அப்பாவை முற்றிலும் வெறுக்கச் செய்து மனரீதியாக அவரைவிட்டு முற்றிலும் குழந்தையைப் பிரித்துவிட்டாள் என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சக்கரவர்த்தி அந்த அற்ப வேலைக்காரியை தன் எதிரியாகப் பாவிப்பாரா இல்லையா? அப்படித்ததான் நாம் தன்னிகரற்ற தேவனுக்கு பல அற்ப எதிரிகளை உருவாக்கி வைத்திருக்கிறோம்.
ஒரு கல் தேவனுக்கு எதிரியாக முடியுமா?
நிச்சயம் இல்லை. ஆனால் அந்தக் கல்லை விக்கிரகமாகச் செதுக்கும் போதோ அது அவருக்கு எதிராகிவிடும் அல்லவா?
இல்லை, மனிதர் அதை வணங்கும்போதுதான் அது அவருக்கு எதிரானது அதுவரை அது வெறும் பொம்மையே என்று சிலர் வாதிடுவார்கள்!
நான் அதை மறுக்கிறேன், நியாயப்பிரமாணத்தின் பிரதான கட்டளைகளில் ஒன்று ” மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம் (யாத் 20:4). ஏன் அவைகளை உண்டாக்கக்கூடாது? பொம்மையை உண்டாக்குவது குழந்தைகள் விளையாடுவதற்கு ஆனால் விக்கிரகத்தை உண்டாக்குவதே அதைத் தொழுதுகொள்ளத்தான்! சிந்திக்கத் தெரிந்த மனுக்குலமே! உனக்கு பொம்மை வேறு, விக்கிரகம் வேறு என்பது தெரியாதா?
இப்பொழுது சொல்லுங்கள், ஒரு காகிதம் தேவனுக்கு எதிரியாக முடியுமா?
நிச்சயம் இல்லை. ஆனால் அது பணமாக அச்சிடப்படும் போதோ???!!
இல்லவே இல்லை என்பதுதான் பலரின் வாதம். பணம் பாவம் இல்லை அதற்கு மனிதன் அடிமையாவதுதான் பாவம் என்பார்கள். “விக்கிரகம் பாவம் இல்லை அதை வணங்குவதுதான் பாவம்” என்று சொல்லுவது போன்ற தவறான வாதம்தான் இது!
அதெப்படி?…விக்கிரகமும் பணமும் ஒன்றாகுமா சகோதரரே! விக்கிரகம் தேவனுக்கு அருவருப்பானது. ஆனால் பணத்தையோ அவரே அதைப் படைத்தார், தனது பிள்ளைகளுக்குக் கொடுத்து அவர்களை ஆசீர்வதிக்கிறார். ஆண்டவர் இயேசுவே தச்சுத்தொழில் செய்து பணம் சம்பாதித்தார் அப்படிப்பட்ட பணம் பாவமாகுமா? அது தேவனுக்கு எதிரியாகுமா?? இப்படிப் பல கேள்விகள் அடுக்கடுக்காக இந்நேரத்தில் நமக்கு எழும்பும்.
பணத்தை தேவன் படைத்தாரா?
எங்களது Facebook விவாதத்தில்கூட ஒரு சகோதரர் “Money is also created by Him” என்று எழுதியிருந்தார். இது முற்றிலும் தவறு. தேவன் பணத்தை சிருஷ்டிக்கவில்லை. பணம் விழுந்துபோன மனிதனின் படைப்பு. ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் இருந்தபோது பணமோ, பணம் பற்றிய சிந்தனையோ, பணம் குறித்த தீர்க்கதரிசனமோ எதுவுமே அங்கு இல்லை. ஒருவேளை மனிதன் பாவத்தில் விழாமல் தேவ சித்தத்தின்படி பலுகிப் பெருகி பூமியை நிரப்பியிருந்திருந்தால் கூட பணத்திற்கு அங்கே இடமேயிருந்திருக்காது.
பணம் என்பது வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதம்.வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதத்தை தீமையாக மாற்றுவது எது? அதற்குப் பின்னால் இருக்கும் சுயநலத்தை மையமாகக் கொண்ட வர்த்தக முறையே!! இந்த வர்த்தக முறை மனிதன் விழுந்துபோனவுடனேயே தொடங்கிவிட்டது.
இந்த வியாபார முறையில் அப்படியென்ன தீமை இருக்கிறது?
“என்னிடம் உள்ள இந்தப் பொருள் உனக்குத் தேவையென்றால் உன்னிடம் உள்ள இதே மதிப்புள்ள எனக்குத் தேவையான ஒன்றை அதற்குப் பதிலீடாகக் கொடு!” என்பதுதான் வியாபாரத்தின் ஒட்டுமொத்த சாராம்சமாகும். அக்கால தானிய வர்த்தகத்திலிருந்து இக்கால மென்பொருள் வர்த்தகம் வரைக்கும் இதுவே அடிப்படை. சுயத்தின் வலைக்குள் சிக்குண்ட வீழ்ந்துபோன மனித குலத்துக்கு இந்த வர்த்தக முறையைத் தவிர வேறு எந்த மாற்றும் இல்லை. “வியாபாரம்” என்ற ஒற்றைச் சொல்தான் மனிதன் ஒருவரையொருவர் சார்ந்து வாழவேண்டும் என்ற நல்ல நிர்பந்தத்துக்குள் நம்மை வைத்திருக்கிறது. இல்லாவிட்டால் சுயநல மிருகங்களாகிய நாம் ஒருவரை கடித்துப் பட்சித்து ஏகமாய் அழிந்திருப்போம். விஷத்தை விஷத்தால் முறிப்பதுப்போல சுயநலத்தின் மொத்த உருவாய் மாறிப்போன மனித இனம் பூமியில் நீடித்திருக்க வேண்டுமென்றால் அந்த சுயநலத்தையே மையமாகக் கொண்டு ஆனால் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ நிர்பந்திக்கும் ஒரு வாழ்க்கைமுறைதான் சரியான தீர்வு.
நான் பிழைக்க எனக்கு உணவுப் பொருள் விளைவிக்கும் ஒரு விவசாயி வேண்டும், அதை எனக்கு விற்க ஒரு வியாபாரி வேண்டும். அவர்கள் இருவரும் பிழைக்க வேண்டுமென்றால் அவர்களுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து அவர்களது பொருளை நுகர நான் வேண்டும். இப்படி காலைமுதல் இரவு வரை என் வாழ்வில் எனக்கு தேவையானவற்றை தருவோரும் அதற்கு ஈடாய் அவர்கள் என்னிடமுள்ள சமமான மதிப்புள்ள ஒன்றைப் பெற்றுக்கொண்டு பிழைப்போரும் ஏராளம்! ஏராளம்! இதுதான் இன்றைய உலகை இயங்க வைக்கிறது.
சுயநலமிக்க இருவர் ஒருவரையொருவர் சார்ந்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம்!! இன்று நாம் பிழைத்திருக்கவும், முன்னேறவும் காரணம் இந்த வர்த்தக முறையே! அத்தியிலை அணிந்த மனிதனை கோட்சூட் போடவைத்து அழகுபார்த்தது இந்த வர்த்தகமுறையே! புறாக்கள் கால்களில் செய்தியைக் கட்டி அனுப்பிய மனிதனை இன்று சாட்டிலைட்களை அனுப்ப வைத்தது இந்த வியாபாரமுறையே! சற்று சிந்தித்துப் பாருங்கள்! இது மாத்திரம் இல்லாதிருந்தால் நாம் இன்னும் கற்காலத்திலேயே இருந்திருப்போம். இன்று நாம் காணும் மேகத்தை வருடும் பலமாடிக் கட்டிடங்களும், அதிநவீன வாகனங்களும், தொலைதொடர்பு சாதனங்களும் எல்லாம் எல்லாம் இதனால் உண்டானவை.
ஆனால் இந்த வர்த்தகமுறை மனிதனை அவன் சுயநலத்திலிருந்து ஒருநாளும் விடுதலையாக்காது மாறாக அவனை இன்னும் பெரிய சுயநலக்காரனாக மாற்றும். என்று மனிதன் சுயநலத்தை விட்டுவிடுகிறானோ அன்று உலகின் மொத்த வியாபாரமும் படுத்துவிடும். அகிலத்தின் முன்னேற்றச் சக்கரம் அடியோடு நின்றுவிடும். ஒட்டுமொத்த உலகமும் திசைமாறி பயணிக்கத் தொடங்கிவிடும். ஆனால் அது இயேசுவின் வருகைவரை நடக்க முடியாது, நடக்காது, ஏன் நடக்காது? இந்த உலகத்தை சுயநலக் கூண்டுக்குள் அடைத்து தன்விருப்பத்துக்கேற்றபடி இழுத்துச்செல்லும் கபட சூத்திரதாரி யார்? அவனுக்கு என்னவேண்டும்? நமது வியாபாரமுறையைப் பயன்படுத்தி அவன் சாதித்துக் கொண்டிருப்பது என்ன? போன்ற அதிர்ச்சிகரமான உன்மைகளை இந்தக் கட்டுரைத் தொடரில் விவாதிக்கப்போகிறோம்.
கரன்சி வருவதற்குமுன் ஆரம்பகாலத்தில் பண்டமாற்று முறை இருந்தது. பண்டமாற்று முறையென்பது ஒரு பொருளைக் கொடுத்து அதற்க்கு ஈடான இன்னொரு பொருளைப் பெற்றுக்கொள்வதாகும். இதன் பரிணாம வளர்ச்சியே கரன்சி வர்த்தக முறை.
இந்த வர்த்தகமுறைதான் சகல தீமைகளுக்கும் ஊற்றுக்கண் என்பதை விளக்க உங்களை கற்காலத்துக்குக் கொண்டுசெல்ல விரும்புகிறேன். மனிதன் தான் நிர்வாணி என்பதை அறிந்தபின் அவனுக்கு உடை என்பது ஒரு அத்தியாவசியமான தேவையாயிற்று. நான் ஒரு நல்ல வேட்டைக்காரன் என்று வைத்துக்கொள்ளுங்கள், நான் மான்களை வேட்டையாடி அவற்றின் தோல்களை எடுத்து உடையாக மாற்ற என்னால் முடியும். எனக்கு அருகில் வசிக்கும் இன்னொரு நபர் ஒரு நல்ல தோட்டத்தை வைத்து பராமரிக்கிறார். ஆனால் அவரால் வேட்டையாட முடியாது. அவருக்கு உடை தேவை, எனக்கு நல்ல ஆரோக்கியமான கனிகள் தேவை.நாங்கள் இருவரும் பண்டத்தை மாற்றிக்கொள்ளுகிறோம்.
ஆஹா எத்தனை அருமையான உறவு! ஆனால் பிரச்சனை எங்கு உருவாகிறது தெரியுமா?
இங்கு காட்சியில் இன்னொரு புது நபர் நுழைகிறார். அவர் என்னைவிட சிறந்த வேட்டைக்காரன் என்று வைத்துக் கொள்ளுவோம். அவரால் புலிகளளைக் கூட வேட்டையாட முடியும். அவர் புலித்தோலில் அழகான உடை செய்து என் நண்பருக்குக் காட்டுகிறார். மான்தோலை விட புலித்தோல் உடை அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது, வியாபாரம் அவர் கைக்கு மாறுகிறது. நான் நஷ்டப்படுகிறேன். எனவே நான் எனது விட்ட வியாபாரத்தை மீண்டும் பிடிக்க ஏதேனும் புதுமையைப் புகுத்தி என் வாடிக்கையாளரை கவர வேண்டும் என்ற கட்டாயத்துக்குள் தள்ளப்படுகிறேன், இல்லாவிட்டால் என்னால் நிலைக்கவும், பிழைக்கவும் முடியாது. இங்குதான் போட்டி பிறக்கிறது, இங்குதான் முன்னேற்றமும் பிறக்கிறது. இன்று நாம் தொலைதொடர்பு சந்தையில் காணும் சகல அதிநவீனப் பொருட்களும் வர்த்தகப் போட்டியினால் விளைந்தவையே! இந்த வர்த்தகப் போட்டியே தெருவோர வியாபாரிகளிலிருந்து வல்லரசுகள்வரை யாவரையும் ஆட்டிவைக்கிறது. நம்மையெல்லாம் எங்கோ ஒரு முடிவை நோக்கி இழுத்துச் செல்லுகிறது.
இதன் விளைவாக போட்டி பொறாமை ஆதிக்க மனப்பான்மை பெருகி அன்பு தணிந்து போனது. ஏதேன் தோட்டத்தில் தேவ பிரசன்னத்தில் வாழ்ந்த மனிதனுக்கு தேவன் தேவன் ஆயத்தப்படுத்தியிருந்த வாழ்க்கைமுறை நிச்சயமாக இது அல்லவே அல்ல. மனிதனை தேவன் உருவாக்கும் முன்னரே அவனுடைய சகல தேவைகளையும் ஆயத்தம் செய்து தயாராக வைத்திருந்தார். சுருக்கமாகச் சொல்லப்போனால் ராஜபோக வாழ்க்கை!
தேவன் ஆதாம் ஏவாளிடம் எதிர்பார்த்ததெல்லாம் அவர்கள் தேவனை நேசித்து அவரோடு ஐக்கியம் கொள்ளவேண்டும், அவர்கள் ஒருவருக்கொருவர் அன்புசெலுத்தி ஐக்கியத்தில் வாழவேண்டும். அவர்கள் ஒருவேளை பாவத்தில் விழாமல் தேவசித்தப்படி பலுகிப் பெருகி பூமியெங்கும் பரவி இருந்திருப்பார்களானால்கூட அவர்களுக்கு தேவன் தந்த வாழ்க்கைமுறை முற்றிலும் வித்தியாசமானதாக இருந்திருக்கும்.
அந்த வாழ்க்கை சுயநலத்தையும் போட்டியையும் தூண்டிவிட்டு அன்பைத் தணியச் செய்யும் இன்றைய வர்த்தகமுறைபோல இல்லாமல். தியாகத்தையும் அன்பையும் மையமாகக் கொண்ட நீதியே உருவான ஒரு வாழ்க்கைமுறையாக இருந்திருக்கும். காரணம் மனிதன் ஏதேனில் வெளிச்சத்தில் வாழும்வரை தனது அனைத்துக் காரியங்களுக்காகவும் தேவனையே சார்ந்திருந்து சகலத்தையும் அவருடைய கரத்திலிருந்தே பெற்றுக்கொள்ளும் உன்னத நிலையிலிருந்தான். தேவன் வியாபாரி அல்ல, அவர் தகப்பன்! அவரிடமிருந்து வருவது அன்பு! அன்பு! அன்பு மட்டுமே!! அவர் பிள்ளைகளும் அப்படியே வாழும்படி செய்திருந்திருப்பார்.
ஆனால் அவனுக்கோ தேவனைச் சார்ந்திருக்க விரும்பவில்லை. சர்ப்பத்தின் பேச்சுக்கு செவிகொடுத்து நன்மைதீமையை நானே அறிந்து நானே என்வாழ்வைத் தீர்மானித்துக்கொள்ளுகிறேன் என்ற ஒரு அபாயகரமான முடிவை எடுத்து ஏதேனைவிட்டு வெளியே வந்தான். நன்மைதீமை அறியத்தக்க கனியைப் புசித்து கண்கள் திறக்கப்பட்ட(!) மேதாவியான மனிதனது அரிய கண்டுபிடிப்புதான் இந்த வர்த்தகமுறை.
என்று வியாபாரம் என்ற ஒன்று மனித சமுதாயத்தில் நுழைந்ததோ…அன்று மனித வரலாறு திசைமாறி பயணிக்கத் துவங்கிவிட்டது.
“பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்”, “பணம் பாதாளம் வரை பாயும்” என்பது போன்ற பணத்தைப் போற்றும் வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு உலகத்தாரைப்போல சிந்திக்கப் பழகிவிட்ட நம்மை “பண ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் வேர்” என்ற எச்சரிப்பின் வேதவார்த்தை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. காரணம் உலகத்தின் சேவகனாய் மாறிப்போன நமது சமகால கிறிஸ்தவமும்கூட பணத்தை “ஆசீர்வாதம்” என்றே போதித்து நமது சிந்தையையும், நோக்கத்தையும் பணத்துக்கு நேராய் திருப்பி விட்டது. “பணம் பாவமல்ல பண ஆசைதான் பாவம்” என்ற அர்த்தமற்ற, அபத்த உபதேசத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விட்டோம். பணம் ஆசீர்வாதமென்றால் அந்த ஆசீர்வாதத்தை வாஞ்சிப்பது எப்படி தீமையாக முடியும் என்று நாம் ஏன் சிந்திப்பதில்லை????
பாவத்தின் கசப்பை அறியாமல் நாம் பாவத்தை வெறுக்க முடியாது. பாவத்தின் கொடூரத்தைப் பார்க்க வேண்டுமானால் அந்தக் கசப்பான பாத்திரத்தின் வண்டல்களைக் குடித்தவராய் கோரச்சிலுவையில் தொங்கும் ஆட்டுக்குட்டியானவரைப் பாருங்கள்! அவரை சிலுவையில் தொங்கக்கண்ட ஒருவனும் பாவத்தை இனி நேசித்து “திருட்டுத்தண்ணீர் தித்திக்கும்! அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும்” என்று அதில் லயித்திருக்க முடியாது. பண ஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேர் என்று வேதம் ஏன் சொல்லுகிறது என்பதை அறிந்துகொள்ள பணமும் வியாபாரமும் உலகத்திலும், தேவனுடைய இருதயத்திலும் உண்டாக்கிவைத்திருக்கும் ரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்! பின்னர் புரியும் புதிய உடன்படிக்கையின் அடிப்படை என்ன என்பதும், ஏன் கிறிஸ்து தரித்திரருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கச் சொன்னார் என்பதும்!!
பணம் நல்லதா என்று ஒரு மிஸ்டர் எக்ஸைக் கேட்டால் என்ன சொல்லுவார்?
ஆம், பணம் நிச்சயம் நல்லது ஏனென்றால், பணத்தினால்தான் நானும் என் குடும்பமும் மூன்று வேளை பசியாறுகிறோம், ஒரு நல்ல வாகனத்தில் பயணிக்கிறோம். பணம் இருப்பதால்தான் நாங்கள் எல்லா வசதியையும் பெற்று சுகமாய் வாழ்கிறோம்…So Money is God’s Blessing!!!
பணம் நல்லதா என்று இன்னொரு இளம் விதவையைக் கேட்கிறோம். இவர் வேறு யாருமல்ல நாம் அன்றாடம் செய்தித்தாளில் பல மனிதருடைய சோகக்கதைகளைப் படித்து “உச்” கொட்டுகிறோமே அவர்களில் ஒருவர். அவரது கணவர் வறுமையின் காரணமாக வட்டிக்குக் கடன் வாங்கி வேலை செய்து சம்பாதிக்க வெளிநாடு போய் சில நாட்களிலேயே மர்மமான முறையில் இறந்துவிட்டார். கடன் பாரம் அழுத்துகிறது. பெற்ற பிள்ளைக்கு மூன்று வேளை உணவு கொடுக்க முடியவில்லை. உறவினர் கைவிட்டு விட்டனர். ஆரோக்கியமான உணவுக்கு வழியின்றி பிள்ளை வியாதிப்பட்டு மரித்துவிட்டது. பசி, நிந்தை, சோகம், வறுமை, இழப்பு எல்லாம் பணத்தால்…. இவர் பணத்தைக்குறித்து என்ன சொல்லுவார்?
நீங்கள் ஒரு தகப்பனாக/தாயாக இருந்தால் ஒரு உன்னத நோக்கத்துக்காக மேற்கண்ட இருவரையும் பூமியில் படைத்து, அவர்களுக்கு ஒரு குடும்பத்தையும் கொடுத்து, இருவரையும் ஒரே விதமாக நேசிக்கும் தகப்பனாகக் கர்த்தர் அந்தப் பணத்தை எப்படிப் பார்ப்பார் என்பதை இப்போது நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்! மிஸ்டர் எக்ஸ் போன்ற மைனாரிட்டிகளுக்காக சந்தோஷப்படுவாரா? அல்லது அந்த இளம் விதவை போன்ற உலகமெங்கும் பரவிவாழும் வறிய மெஜாரிட்டிக்காக கண்ணீர் விடுவாரா??
இன்று உலகத்தில் பசியால் மரிக்கும் மனிதர் குறிப்பாக குழந்தைகள் ஏராளம்! தாயின் வயிற்றிலிருக்கும்போதே போதுமான உணவின்றி கர்ப்பத்திலேயே மரித்து பிணமாய் இந்த உலகில் வந்து விழும் ஜீவன்கள் ஏராளம்! நாள்தோறும் மருத்துவ வசதியின்றி மரிப்போர் ஏராளம்! பணத்துக்காக அனுதினமும் நடக்கும் கொலைகள், குற்றங்கள் ஏராளம்! பணத்தினால் பிரிந்த குடும்பஉறவுகள் ஏராளம்! சுருக்கமாகச் சொன்னால் உலகம் குதறிப்போடப்பட்டிருக்கிறது. ஒருநாள் காலையிலிருந்து இரவு வரை பணத்துக்காக உங்களைச் சுற்றி அன்று நடந்த தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்கள் எத்தனை என்பதை ஒரு நோட்டில் எழுதுங்கள், பின்னர் சொல்லுங்கள் அந்தப் பணத்தை தேவன் படைத்தாரா? பணத்துக்கும் தேவநீதிக்கும் சம்பந்தமுண்டா? பணத்தை மையமாகக் கொண்ட உலகம் தேவ சித்தமா? பணம் தேவன் அங்கீகரித்த ஆசீர்வாதமா? தேவராஜ்ஜியத்தில் பணம் ஒரு அங்கமாகுமா?
சீஷர்கள் திருமுழுக்கு பெறுவதன் அர்த்தம் என்னவென்றால் இனி நானல்ல. “நான்” என்ற அந்தப் பழைய மனுஷன் சிலுவையில் அறையப்பட்டு விட்டான். இனி கிறிஸ்துவே என்னில் பிழைத்திருக்கிறார். இனி கிறிஸ்துபோல நடந்து கொள்ளுவேன்! கிறிஸ்து போல சிந்திப்பேன்! கிறிஸ்து பார்ப்பதுபோல பார்ப்பேன் என்று புதிய ஜீவனைப் பெற்றுக்கொண்டதற்கான அடையாளமாகத்தான் திருமுழுக்குப் பெற்றுக்கொள்வார்களாம்!!!! அந்த சீஷனிடம் ஒரு கேள்வி கேட்டால் அவன் தனது மீட்கப்பட்ட சுபாவப்படி அந்தக் காரியத்தை கிறிஸ்துவின் கண்கொண்டு பார்த்துத்தான் பதில் சொல்வானேயன்றி “தனக்கு அது எப்படி இருக்கிறது” என்ற சுயத்தின் அடிப்படையில் பதில் அளிக்க மாட்டான். நமது Facebook விவாதத்தில் பலரும் அளித்த கமெண்ட்டுகள் அப்படியே இருக்கிறது. அப்படி செய்தால் அடிப்படையில் எங்கோ தவறு இருக்கிறது என்று அர்த்தம். நாம் எப்படி ஒரு காரியத்தை ஆராய்ந்து பார்க்கிறோம்? நம்முடைய வரவு செலவை மாத்திரம் கணக்கெடுத்து பதிலளிக்கிறோமா? அல்லது ஒரு மகனாக தகப்பனது மனக்காயத்தை, பாரத்தை உணர்ந்து, நாம் புதிதாய் நுழைந்த பரலோக ராஜ்ஜியத்தின் மதிப்பீடுகளின் அடிப்படையில் பதிலளிக்கிறோமா?
சகோதரனே! நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்! வறுமை கொடுமையானதுதான், அதன் விளைவுகள் தேவனுடைய இருதயத்தை காயப்படுத்தும் என்பதும் உண்மைதான். ஆனால் தங்கள் கூற்றுப்படி வறுமைதான் தீமையே தவிர பணம் அல்ல. பணம் அந்த வறுமையின் காயத்தை ஆற்றும் அருமருந்தல்லவா? என்ற கேள்வி வரும்.
வறுமைக்குத் தீர்வு பணம் என்ற நிலைதான் கொடுமை! காரணம் பணம் நமது தயாளகுணமுள்ள தேவனின் படைப்பல்ல. அவர் நமது தேவையை சந்திக்கும் விதத்தைப் பாருங்கள், ஆக்ஸிஜன், சூரிய ஒளி, தண்ணீர் இப்படி எல்லாருக்கும் எல்லாவற்றையும் நிறைவாய்த் தந்து படைத்திருக்கிறார்.
அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். (மத் 5:45).
அவர் ஆதாமையும் ஏவாளையும் படைக்கும் முன்னரே அவர்கள் பசிக்கு ஒரு மரத்தையல்ல, ஒரு தோட்டத்தையே உருவாக்கினார். தாகத்துக்கு ஒரு கிணற்றையல்ல ஒரு நதியையே உண்டாக்கினார் (ஆதி 2:10). அதுதான் தேவராஜ்ஜியம்! அதுதான் ஆசீர்வாதம்.
ஆனால் பணம், வியாபாரம் போன்றவை மகாபாபிலோனாகிய உலகத்தின் (World System) தாக்கத்தால் மனிதன் உண்டாக்கியது. அது எல்லோருக்குமானது அல்ல! அது ஒருசார்புடையது, நயவஞ்சகமானது, அநீதியான உலகப்பொருள்(லூக் 16:9,11) என்று இயேசுவே அதைக் குறித்து சொல்லியிருக்கிறார்!
ஏன் அது அநீதியானது?
ஏனெனில் அது சிலரை மட்டும் வாழ்வாங்கு வாழ்விக்கிறது, பலரை வாட்டி வதைக்கிறது! சிலருக்கு மட்டும் எல்லாவற்றையும் தேவைக்கு அதிகமாகத் தருகிறது, பலரிடமிருந்து உள்ளதையும் பிடுங்கிக் கொள்கிறது! சிலரது வாழ்வை மட்டும் அது செழிப்பாக்குகிறது, பலரது வாழ்வை செல்லரிக்க வைக்கிறது! இது கொடுமை! இது அநியாயம்! இதை நீதியுள்ள தேவனால் சகிக்க முடியாது!! பரலோக ராஜ்ஜியத்தால் இதை ஜீரணிக்க முடியாது!! தேவாவியால் நிரப்பப்பட்ட பரிசுத்தவான்கள் பல வேளைகளில் மனதில் அழுத்திய இந்த பாரத்தைத் தாங்காமல் “ஐசுவரியவான்களே! உங்களுக்கு ஐயோ!!” என்று அலறியிருக்கிறார்கள் (யாக் 5, மத் 19:23, மாற் 10:23-25, லூக் 6:24, லூக் 1:53, யாக் 1:10,11, வெளி 18)
தேவனுடைய சித்தம் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும், உயர்வு தாழ்வு என்பது கூடாது என்பதே! பரலோக ராஜ்ஜியம் குறித்த முதல் அறிமுகமே“பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் (லூக்கா 3:4)” என்று உரத்த குரலில் அறிவிக்கிறது. ஒரு கூட்டத்தில் ஒருவன் பசியாயிருக்க மற்றொருவன் அதைக் கண்டும் காணாமல் தான் மாத்திரம் புசித்துக் குடித்து அதினால் மகிழ்ச்சியாய் தேவனுக்கு நன்றி செலுத்துவானானால் அவன் தேவபிள்ளையானாலும் அவன் மீது தேவகோபம் பற்றி எரியும் என்று வேதம் தெளிவாகச் சொல்லுகிறது. இந்த சுபாவத்தின் நிமித்தம் கொரிந்து சபையில் தேவபிள்ளைகள் பலர் வியாதிப்பட்டிருந்தார்கள், சிலர் மரண தண்டணையும் பெற்றிருந்தார்கள். இதுதான் பவுல் 1 கொரிந்தியர் 11-ஆம் அதிகாரத்தை எழுதக் காரணமாயிற்று.
தேவனுடைய திருச்சபையின் அழகே முதல் நூற்றாண்டு சபையில் நிலவிய சமநிலையே! விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது (அப் 4:32). உலக வரலாற்றில் பணம் தரை மட்டும் தாழ்த்தப்பட்டு தேவன் உயர்த்தப்பட்டது அங்குதான்! வியாபாரத்தின் வஞ்சகங்கள் தவிடுபொடியாக்கப்பட்டது அங்குதான்! அந்த இடத்தில் அவர்கள் மத்தியில் பகிரப்பட்ட அந்தப் பணம் கடவுளின் எதிரியல்ல, கடவுளின் அடிமை என்பதை மனதார ஒப்புக்கொள்ளுகிறேன்.
தேவ ஆசீர்வாதம் என்பது என்ன? நானும் எனது சக மனிதனும் அதை சமமாய்ப் பெற்று மகிழ்ச்சியாயிருப்பது. நான் மாத்திரம் நன்றாயிருந்து என் சக மனிதன் வேதனைப்பட்டால் ஒரு கிறிஸ்தவனைப் பொறுத்தவரையில் அது தேவ ஆசீர்வாதமல்ல! அது நான் நன்றி செலுத்துமிடமல்ல, ஊழியம் செய்ய வேண்டிய இடம்!! அந்த சூழ்நிலையில் நான் என் ஆசீர்வாதத்தைக் குறித்து மாத்திரம் மகிழ்ந்திருப்பேனானால் நான் கிறிஸ்துவின் சுபாவமுடையவன் அல்ல. அவர் நாம் தரித்திரத்தில் இருப்பது கண்டு மனம் கொதித்து நம்மை மீட்க பூமிக்கு விரைந்தோடி வந்தாரே! அவர் துதிகளின் மத்தியில் பிதாவின் சமூகத்திலேயே தங்கித் தாபரித்திருந்திருக்கலாமே!
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே (II கொரிந்தியர் 8:9 ). “தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்!” என்று ஒரு உலகத்தைச் சேர்ந்த முற்போக்குக் கவிஞனே பாடியிருக்க, நான் கிறிஸ்தவன் என்ற பெயரை வைத்துக்கொண்டு, தேவனுடைய மனநிலையிலிருந்து சிந்திக்காமல் எனது ஆசீர்வாதம், எனது குடும்ப நன்மை பற்றி மாத்திரம் கருத்தாயிருப்பேனானால் அது வெட்கக்கேடு!! அப்படிப்பட்ட ஒரு ஆசீர்வாதத்துக்காக வாழ்வதைவிட மரிப்பதே மேல்!
பணம் எல்லோருக்கும் ஆக்ஸிஜன், சூரியஒளி போல சமமாய் கிடைக்குமானால் அது நல்லது, தேவனிடத்திலிருந்து வந்தது என்று ஒரு கிறிஸ்துவின் கண்கொண்டு பார்க்கும் கிறிஸ்தவனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். இல்லாத பட்சத்தில் அது பரலோக ராஜ்ஜியத்துக்கு எதிரானது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் அல்ல. இன்னும் பணத்தின், வியாபாரமுறையின் தீமை குறித்து நிறைய பேசவேண்டியிருக்கிறது. “சகோதரனே! உன்னைக் குறித்து என்ன?” என்ற பரிகாசங்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் காரியத்தில் எனது பல தோல்விகளை கனியற்ற வாழ்க்கையைக் குறித்து ஒளிவுமறைவில்லாமல் ஒப்புக்கொள்ள வேண்டியதுமிருக்கிறது. அதுவே எனது/நமது ஆவிக்குரிய முன்னேற்றத்துக்கு ஒரு ஆரம்பமாக அமையட்டும்.
(கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து தியானிப்போம்..)