தேவனுடைய படைப்பில், மனிதனே கிரீடமாக விளங்குகிறான். வானவிரிவில் காணும் நட்சத்திரங்களின் வியப்பைக் காட்டிலும் அதிக வியப்புடையது மனிதனே ஆவான்! முதலாவது உங்கள் சரீரத்தைப் பார்த்து, அதை தேவன் எத்தனை ஆச்சரியமாய் சிருஷடித்திருக்கிறார் என்பதைப் பாருங்கள்.
உங்கள் இருதயத்தை சற்று நோக்குங்கள்! ஒரு வருடத்தில் எவ்வித விடுமுறையும் இல்லாமல் உங்கள் இருதயம் 40 மில்லியன் தடவை துடிக்கின்றது! ஒவ்வொரு நாளும் உங்கள் தலையிலிருந்து பாதம் வரைக்கும் இரத்தத்தை 100,000 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இரத்தக் குழாய்களின் மூலம் செலுத்துகிறது! ஒவ்வொரு நாளும் சேதமடைந்து அழிந்து போகும் சிவப்பு இரத்த அணுக்களுக்குப் பதிலாய் உங்கள் சரீரம் 172-பில்லியன் அளவிற்கும் மேலான சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்கின்றது. காரியம் இவ்வாறு இருப்பதால், இன்று நீங்கள் உயிரோடு வாழ்வதே ஓர் மகா அற்புதமல்லவா!
இவ்வாறு மனிதனின் வியக்கத்தகு சரீரத்தைக் காட்டிலும், இன்னமும் அவனுள் காணப்படும் மாபெரும் விந்தை யாதெனில், அவனுக்குள் ஓர் ஆவி உள்ளது! இத்தன்மையே படைப்புகளுக்கெல்லாம் சிகரமாய் நம்மை விளங்கச் செய்கின்றது. நம் ஆள்த்துவத்தின் ஆழத்திற்குள் அடங்கியிருக்கும் இந்த ஆவியே, "தேவன் ஒருவர் உண்டு" என நமக்கு உணர்த்துகிறது.
மானிடர்களுக்குள் இருக்கும் ஆவி, தாங்கள் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய ஓர் சர்வ வல்ல கர்த்தா இருக்கிறார் எனக் கூறுவதைக் கேட்கிறபடியால், ஏதாவதொரு வஸ்துவை தெய்வமாக வணங்குகிறார்கள் இவ்வித ஆவிக்குரிய கணக்கு ஒப்புவிக்கும் இயல்பான உணர்வு எந்த மிருகத்திற்கும் கிடையாது! தன் நடத்தைக்குரிய குற்ற உணர்வை மனிதன் மாத்திரமே உணர முடியும். ஏனெனில் அவன் ஒருவனுக்கே ஓர் மனசாட்சி உள்ளது!! இவனைப் போல ஓர் "பக்தியுள்ள குரங்கையோ" அல்லது ஆவிக்குரிய சிந்தை கொண்ட "ஓர் நாயையோ" நீங்கள் ஒருக்காலும் கண்டுபிடித்திட முடியாது!
ஆம், மனிதன் ஓர் நித்திய ஜீவராசியாவான்! மனிதனே தேவனுடைய படைப்பில் கிரீடமாய் திகழ்கிறான். அவன் தேவனோடு ஐக்கிய உறவு கொள்வதற்கே சிருஷடிக்கப்பட்டவன்!