நான் சந்தித்த இரண்டு நபர்கள் பற்றி இங்கு தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்
1. பல வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரில் மிகப்பெரிய பணக்காரராக இருந்த ஒருவர் (ஊரிலேயே பெரியவீடு யாரிடமும் பைக் இல்லாத நேரத்தில் பைக் அத்தோடு ரூபாய் நோட்டுக்களை முள் நிறைந்த இடத்துக்குள் தூக்கி வீசி அந்த கொடிய முள்ளுகளுக்குள் இறங்கி முள் குத்தினாலும் போட்டிபோட்டுகொண்டு எடுக்கும் ஏழை மக்களை பார்த்து ரசிக்கும் அளவுக்கு பணம் வைத்திருந்த ஒருவர்)
சில வருடங்களிலேயே தினம் 10 ரூபாய் சம்பளத்துக்கு நான் வேலை பார்த்த SPIC கம்பனியில் சிந்திய யூரியா உரங்களை கூட்டி அள்ளிப்போடும் தினக்கூலி வேலைக்கு எங்களுடன் வந்து சேர்ந்தார்.
அவரை பார்க்கும் யாருக்கும் அவர் மேல் இரக்கம் வரவேயில்லை அவர் பெரிய பணக்காரராக இருந்தார் என்ற எண்ணமும் வரவில்லை. மாறாக ஆடிய ஆடடம் என்ன? அடங்கி போனதென்ன என்று கோபம்தான் வந்தது.
2. சொந்தமாக பெரிய பிரிண்டிங் பிரஸ் வைத்து பலருக்கு வேலை கொடுத்து முதலாளியாக இருந்தவர். டிஜிடல் புரட்சியின் காரணமாக மெஷின்கள் எல்லாம் மதிப்பிழந்து மனைவி ஓடிவிட அனைத்தையும் இழந்து ஒரு பியூன் வேலைக்கு வந்து தற்போது வேலைசெய்துகொண்டு இருப்பவர்.
இவர் முன்பு முதலாளியாக இருந்தார் என்று சற்று இரக்கம் இருந்தாலும் அதற்காக அவரிடம் பியூன் வேலைகளை செய்ய சொல்லாமல் இருக்க முடியாது. அவர் தற்போதைய நிலையில் இருக்கும் வேலைகளை செய்தே ஆகவேண்டும்.
ஒருவர் தற்போது என்ன நிலையில் இருக்கிறார் என்பதைத்தான் உலகம் பார்க்குமேயன்றி அவர் முன்னர் எப்படி நிலையில் இருந்தாலும் அது கொஞ்ச நாளில் அழிந்து போய்விடும்.
அதுபோல் ஆவிக்குரிய நிலையில் உச்ச வரம்புவரை தொட்டு வீழ்ந்து போன அநேக ஊழியர்கள் / விசுவாசிகள் உலகில் உண்டு.
அவர்கள் எந்த நிலையில் இருந்தார்கள் என்பதை நினைத்து சற்று இரக்கம் இருந்தாலும் அவர்கள் தற்போது என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதுவே வேதத்தின் பார்வையில் கணக்கில் கொள்ளப்படும் என்பதை வேதம் தெளிவாக சொல்கிறது.
எசேக்கியேல் 18:24 நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன்செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.
அவன் செய்த நீதிகள் ஒன்றும் தேவ கணக்கில் நினைக்கப்படுவதில்லையாம்.
வெளி 2:5நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.
தற்போதைய பின்வாங்கிய நிலையில் இருந்து உடனே மனம்திரும்ப வேண்டுமாம்.
இயேசுவின் நேரடி சீஷன் என்ற உன்னத நிலையில் இருந்த யூதாசை நினைத்துக்கொள்ளுங்கள் அவனின் கடைசி நிலை என்ன?
எனவே அன்பானவர்களே நாம் கடந்த காலத்தில் எப்படியிருந்தோம் என்பது முக்கியமல்ல,கடைசி நாடகளாகிய இன்று நாம் எப்படி இருக்கிறோம்?
அவர் வரும்போது நம் பரிசுத்தத்தை இழந்து போகாமல் நாம் நமக்குரிய இடத்தை பற்றிக்கொண்டு இருக்கிறோமா என்பதே முக்கியம். எனவே ஆண்டவர் வருமளவும் நமக்குரிய இடத்தை விட்டுவிடாமல் பற்றிக்கொண்டு இருப்போம்.
வெளி 2:25 உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
எபிரெயர் 10:38விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சிலர் நாங்கள் அந்த காலத்தில் எப்படியெல்லாம் ஊழியம் செய்தோம் தெரியுமா? நாங்கள் இந்த சபையின் பெரிய தூண்கள் தெரியுமா? என்று தங்களைப்பற்றி பெருமையடித்துக் கொள்வார்கள். அனால் தற்போது புதிதாக இரட்சிக்கப்பட்டு சபைக்குள் வந்த புதிய விசுவாசி ஒருவருக்கு இருக்கும் அடிப்படை விசுவாசம் கூட அவருக்குள் இருக்காது. சாட்சியான வாழ்க்கையும் இருக்காது.
ஆனால் தேவன் தற்போதைய ஆவிக்குரிய நிலையை மட்டுமே பார்த்து எடை போடுகிறார் என்ற உண்மை எனக்கும் உறைக்கிறது. நானும் சில வேளை புதிய விசுவாசிகளைப் பார்த்து திருந்த வேண்டியிருக்கிறது.